ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் படுகாயம்
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் படுகாயம்;
தாராபுரம்
ஈரோடு-பழனி செல்லும் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் மற்றும் டிரைவராக மனோகரன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஈரோட்டில் இருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது போலீஸ் நிலைய வீதியில் சென்றது. அப்போது கண்டக்டர் யுவராஜ் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்றிருந்தார். அந்த போலீஸ் நிலையம் அருகே வளைவில் திருப்பிய போது திடீரென பஸ்சின் முன்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தமிட்டனர். உடனே பஸ்சை நிறுத்தி, படுகாயம் அடைந்த கண்டக்டர் யுவராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்துனருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.