குன்றத்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்கள்
குன்றத்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்களை கோவில் நிர்வாகம் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசல்
சென்னையில் புகழ்பெற்ற கோவில்களில் குன்றத்தூர் முருகன் கோவில் ஒன்று. இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் ஒரு முகூர்த்தத்தில் 10 முதல் 12 திருமணங்கள் நடத்த கோவில் வளாகத்தில் இடம் உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் அளவுக்கு அதிகமான நபர்களுக்கு திருமணம் நடத்த படிவங்கள் கொடுத்து விடுகிறது. இதனால் முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் அதிக அளவில் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் கூட்ட நெரிசலும், தள்ளு முள்ளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு 2 திருமண வீட்டார் மாறி, மாறி தாக்கி கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் திருமணத்தின்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்போது தனியார் பவுன்சர்களை கோவில் நிர்வாகம் பணிக்கு நிறுத்தியதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பவுன்சர்கள்
இதனால் காலை நேரத்தில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் திருமணத்தை காண உள்ளே செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஒரு திருமணத்திற்கு 5 முதல் 10 நபர்களை மட்டுமே உள்ளே அனுமதித்ததால் அதிகாலை முதல் திருமணத்தை காண வந்த உறவினர்கள் திருமணத்தை காண முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தற்போது குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமண நாட்களில் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்களை நியமித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள்
குறிப்பாக கோவிலில் எந்த அளவுக்கு திருமணத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கி திருமணத்தை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வழங்கி திருமணங்களை நடத்தலாம் எனவும் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்களை கொடுப்பதால் மட்டுமே இது போன்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் கோவில் நிர்வாகம் முறையாக செயல்பட்டால் இது போன்ற பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.