போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடி விட்டார்.
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடி விட்டார்.
கொலை முயற்சி
நெல்லை டவுன் தென்பத்து அருகே உள்ள பூலாங்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 30). இவரை கடந்த 2016-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் நெல்லை டவுன் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவர் மீது நெல்லை கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில் நேற்று டவுன் பகுதியில் பதுங்கி இருந்த முருகப்பெருமாளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், முருகப்பெருமாள் கழிப்பறை செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவரை, போலீசார் அழைத்துச் செல்ல முயன்றபோது, கண் இமைக்கும் நேரத்தில் அவர்களை தள்ளிவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து முருகப்பெருமாள் தப்பி ஓடி விட்டார்.
பரபரப்பு
தொடர்ந்து மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
மாநகர பகுதிகளில் வாகன சோதனையை போலீசார் தீவிரப் படுத்தினர். முருகப்பெருமாளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.