முதுமலைக்கு பிரதமர் மோடி இன்று வருகை

முதுமலைக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். இதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

Update: 2023-04-08 18:45 GMT

கூடலூர்

முதுமலைக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். இதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

பிரதமர் இன்று வருகை

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு இரவில் தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார்.

அங்கிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.35 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக வருகிறார். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள், பராமரிப்பு முறைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிகிறார்.

தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழங்கள் வழங்குகிறார். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

அதன்பின்னர் துப்பாக்கி ஏந்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினரின் வாகனத்தில் சாலை மார்க்கமாக மசினகுடிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தயார் நிலையில் உள்ள ஹெலிகாப்டர் மூலமாக 9.45 மணிக்கு மைசூருக்கு புறப்பட்டு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக-கர்நாடகா மற்றும் கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வாகன ஒத்திகை

இதற்கிடையில் நேற்று காலை 7 மணிக்கு கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும், முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும் போலீசார் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தனர். தொடர்ந்து 11 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் புறப்பட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மசினகுடியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு இயக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. அதன்பிறகு சுமார் 5 மணி நேரம் கழித்து அந்த சாலைகளில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் மாலை 4 மணிக்கு அந்த சாலைகள் மூடப்பட்டது.

நீலகிரிக்கு வரும் 4-வது பிரதமர்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு, 1948-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை 5 முறை நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அதன்பிறகு 1967-ம் ஆண்டு அவரது மகள் இந்திரா காந்தி நீலகிரிக்கு வந்தார். 1990-ம் ஆண்டு ராஜீவ் காந்தி வருகை தந்தார். சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு 4-வது பிரதமராக நரேந்திர மோடி நீலகிரிக்கு வர உள்ளார். இதையொட்டி அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்