புதிய வகை கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை

புதிய வகை கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதால் யாரும் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2022-12-22 23:52 GMT

சென்னை,

இந்தியாவுக்குள் பிஎப் 7 வைரஸ் நுழைந்துள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென கூட்டினார்.

கொரோனா தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஹரி சுந்தரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு சுற்றறிக்கை

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக நடந்த கூட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மத்திய சுகாதாரத் துறை செயலாளரின் சுற்றறிக்கைப்படி, கொரோனா தொற்று எண்ணிக்கையை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள்

தற்போது தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று எக்ஸ்பிபி வகையாகும். இது பிஏ-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் பி.எப்.7 வகையான கொரோனா தொற்று பிஏ-5ன் உள்வகையாகும்.

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட பிஏ-5 தொற்று வகை, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அந்த வசதிகளை அதிகரிக்கலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

முதல்-அமைச்சர் அறிவுரை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கொரோனா பரிசோதனை செய்யவும், தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனையை மேற்கொள்ளவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும், இன்புளுயன்சா காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி, குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

அச்சம் வேண்டாம்

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

சர்வதேச விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தினார். பொதுமக்கள் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்