ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
2 மாத ஊதியத்தை வழங்கக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்;
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை பொறுப்பாளர்கள் ராஜம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். நாகை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் 127 பேருக்கு வழங்கப்படாமல் உள்ள கடந்த 2 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இந்த ஊதியத்தை பெற்று தராமல் அலட்சியமாக பணியாற்றும் ஆதிதிராவிட நல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இளையராஜா வரவேற்றார். இதில் வட்டார செயலாளர்கள் எழிலரசன், சொக்கலிங்கம், முருகையன், சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.