நாகர்கோவில் சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

நாகர்கோவில் சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது. தக்காளி மட்டும் தொடர்ந்து 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-21 21:13 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது. தக்காளி மட்டும் தொடர்ந்து 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை குறைந்தது

காய்கறிகளின் விளைச்சல் குறைவு, முகூர்த்த நாட்களின் தேவை அதிகரிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையானது. இதேபோல் இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் வீட்டுச்செலவை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதோடு, கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்ட தரமான தக்காளி நேற்று ரூ.105 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டது. இதேபோல் இஞ்சி விலையும் குறைந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு ரூ.260-ல் இருந்து ரூ.240 ஆக குறைந்துள்ளது. பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.65 ஆக குறைந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.170-ல் இருந்து ரூ.130 ஆக குறைந்துள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை விவரம் (கிலோ கணக்கில்) வருமாறு (பழைய விலை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):-

விலை விவரம்

தக்காளி (சிறந்த தரமான நாடு மற்றும் ஆப்பிள் வகை)-ரூ.110 (ரூ.140), 3-ந்தர தக்காளி- ரூ.85, புதிய இஞ்சி- ரூ.140, பழைய இஞ்சி ரூ.240 (ரூ.260), கேரட் (நயம்) - ரூ.52 (ரூ.60), கேரட் (குறைந்த தரம்) - ரூ.30 (ரூ.35), நாட்டு கத்தரிக்காய்- ரூ.40 (ரூ.80), வரி கத்தரிக்காய்- ரூ.30 (ரூ.40), பீன்ஸ்- ரூ.70 (ரூ.105), சின்ன வெங்காயம்- ரூ.130 (ரூ.170), பல்லாரி மொத்த விலை- ரூ.22, சில்லரை விலை- ரூ.25, முட்டைக்கோஸ் - ரூ.25 (ரூ.30), பீட்ரூட்- ரூ.30 (ரூ.40), முருங்கைக்காய் மொத்த விலை- ரூ.30, சில்லரை விலை- ரூ.35, காலிபிளவர்- ரூ.40 (ரூ.50), வெண்டைக்காய்- ரூ.40 (ரூ.55), சீனி அவரை- ரூ.30 (ரூ.40), பூசணிக்காய்- ரூ.18, தடியங்காய்- ரூ.30, வெள்ளரிக்காய்- ரூ.30 என்ற விலையில் விற்பனையாகிறது.

காய்கறிகளின் விலை சற்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதுதொடர்பாக குமரி மாவட்ட காய்கனி வியாபாரிகள் நலச்சங்க (அப்டா மார்க்கெட்) பொருளாளர் அய்யப்பன் கூறியதாவது:-

காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவு காரணமாகவும், திருமண சீசன் காலமாக இருந்ததாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்தது. இதனால் தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்த காய்கறிகளின் விலையைவிட நேற்று குறைந்துள்ளது. இதற்கு காரணம் இது ஆடி மாதம் என்பதால் திருமண சீசன்கள் இல்லை. திருமண சீசனாக இருந்தால் நாள் ஒன்றுக்கு வழக்கத்தைவிட 4 முதல் 5 டன் காய்கறிகள் கூடுதலாக விற்பனையாகும். ஆனால் தற்போது நான்கைந்து டன் காய்கறிகள் விற்பனை குறைவு என்பதால் விலை சற்று குறைந்துள்ளது. அதேநேரத்தில் காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்த நிலைதான் தற்போதும் இருந்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்