தொடர் மழையால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

தர்மபுரியில் தொடர் மழையால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update:2022-08-30 23:00 IST

தர்மபுரியில் தொடர் மழையால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. விற்பனை அதிகமாக இருந்தும் போதுமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பூக்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களை காட்டிலும் விநாயகர் சதுர்த்தி நாளில் பூக்களின் விலை குறைந்துள்ளது. பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

பூக்களின் விலை விவரம்

இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று மாலை நிலவரப்படி சாமந்திப்பூ ரகத்துக்கு ஏற்ற போல் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதேபோல் மூக்குத்தி ரோஜா ரூ.160, அரளிப்பூ ரூ.240, செண்டுமல்லி ரூ.30, ரோஜா ரூ.160, சம்பங்கி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.50 என ரகத்துக்கு ஏற்றார் போல் பூக்கள் விற்பனையானது.

இதேபோன்று மல்லிப்பூ ரூ.700, குண்டுமல்லி ரூ.650, ஜாதிமல்லி ரூ.220, கனகாம்பரம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு பூக்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகளும் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்