கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - எம்எல்ஏ செல்வப்பெருந்தகை
கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், கவர்னர் என்கிற ஏஜெண்டுகளை இறக்கி இணையாட்சி செய்யும் வேலையை மத்திய அரசு செய்கிறது. எந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை கவர்னர்கள் செய்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் பணி என்பது அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதை கவனிப்பதே அவரின் முக்கியமான பணி. ஆனால் அதைச் செய்யாமல் தேவையில்லாத அரசியல் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கவர்னரும் இவ்வளவு சர்ச்சையாக பேசியதில்லை.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார், இந்த புகார் கடிதத்தின் மீது ஜனாதிபதி அவர்கள் விரைந்து ஒரு நல்ல முடிவெடுத்து தமிழகத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவித்துவரும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.