முக்திக்கான வழிகாட்டி சிவன்- ஈஷா யோகா மைய விழாவில் ஜனாதிபதி பேச்சு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் முக்திக்கான வழிகாட்டி சிவன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.;

Update:2023-02-19 02:12 IST

முக்திக்கான வழிகாட்டி

கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அப்போது 3 முறை ஓம் நமசிவாய என்று கூறி பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்.

உலகில் உள்ள பல்வேறு கலாசாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவை அனைத்திற்குமான மும்மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார். சன்னியாசியாகவும் இருக்கிறார். அவர்தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. முக்திக்கான வழிகாட்டியாக சிவன் இருக்கிறார்.

இருளை போக்கும் நாள்

சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரர் வடிவில் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் தோன்றுகிறார். இது ஒவ்வொரு மனிதனின் ஆண்பால் மற்றும் பெண்பால் பக்கங்களை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இரண்டையும் சமநிலைப்படுத்தும் லட்சியத்தின் வெளிப்பாடாகும். 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் முடிந்து வெயில் காலத்தின் தொடக்கத்தை மகா சிவராத்திரி குறிக்கிறது. மகா சிவராத்திரி இருளின் முடிவை குறிக்கிறது. அறியாமை இருள், மேலும் ஞானத்திற்கான பாதையை திறக்கிறது. வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை தேடுபவர்களுக்கு, இன்று ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இந்த மகாசிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளைப்போக்கி, நம் அனைவரையும் இன்னும் நிறைவான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி, லட்சுமி மஞ்சு, தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்