டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்

டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2023-09-11 15:29 IST

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 6 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மதுரவாயல் பகுதிகளில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படாத காரணத்தினால் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதே டெங்கு போன்ற நோய்கள் உருவாக காரணம் எனவும், மேலும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் சென்னை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இது போன்ற சென்னை மாநகராட்சியின் அலட்சிய போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மதுரவாயல் உள்பட சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முறையான ஆய்வு மேற்கொண்டு டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்