தேர் திருவிழாக்களின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் தேர் திருவிழாக்களின்போது பின்பற்றுவதற்காக அரசு வகுத்துள்ள விதிகளை அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2024-05-15 13:00 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர் திருவிழாவின்போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

கோவில் தேர் திருவிழாக்களின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் தான் இந்த விபத்து நடந்ததாகவும், விதிமுறைகளை பின்பற்ற தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தேர் திருவிழாவின்போது, விதிகளை கண்டிப்பாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோவில் தேர் திருவிழாக்களின்போது பின்பற்றுவதற்காக அரசு வகுத்துள்ள விதிகளை அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்