வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கிய சாம்பாரில் வண்டுகள் கிடந்தன.

Update: 2024-11-17 02:50 GMT

சென்னை,

நெல்லையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயிலில் பயணிகளுக்கு உணவு வசதியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் புறப்பட்டுச் சென்றது. அதில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சி செல்வதற்காக பயணம் செய்துள்ளனர்.

அப்போது ரெயில்வே ஊழியர்கள், காலை நேர உணவு பொட்டலத்தை பயணிகளுக்கு வழங்கினார்கள். அதில் இட்லி, வடை, சாம்பார் ஆகியவை இருந்தது. அதை பிரித்து பயணிகள் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது சாம்பாரில் சிறிய அளவில் 3 வண்டுகள் இருப்பதை பயணி முருகன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரெயிலில் இருந்த ரெயில்வே அதிகாரிகளை அழைத்து புகார் செய்தார்.

அதைக்கண்ட அதிகாரிகள், சாம்பாரில் காணப்படுவது வண்டு இல்லை எனவும், இது சீரகம் மசாலா என விளக்கம் அளித்து சமாளித்து உள்ளனர். ஆனால் சீரகம் மசாலாவில் எப்படி தலை மற்றும் கால்கள் இருக்கும் என பயணிகள் அதிகாரியிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதிகாரிகள் மற்றும் பயணிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அங்கிருந்த சக பயணிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உணவு விநியோகம் செய்த பிருந்தாவன் புட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்து தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பயணியிடம் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்