பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கொள்ளிடம் பகுதியில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.;
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
பருவ மழை
கொள்ளிடம் பகுதியில் இந்த ஆண்டு பருவ மழை காலத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி செயலாளர்களுக்கு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய அறிவுரைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒத்திகை நிகழ்ச்சி
தீயணைப்பு துறை சார்பில் கடல் மற்றும் நீர் நிலை சார்ந்த இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொள்ளிடம் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் கொள்ளிடம் நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் லாரிகள் மூலம் மண் எடுத்துவரப்பட்டு மண்குவித்து வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகிறது. மேலும் அங்கு சவுக்கு மரங்கள் எடுத்து வரபட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவையான மண் எடுத்துவரப்பட்டு சவுக்கு மரங்களும் போதிய அளவுக்கு எடுத்து வந்து வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுகுறித்து நீர்வளத்துறையின் கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பருவ மழை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்கூட்டியே எடுக்கப்பட்டு வருகிறது.போதிய அளவு நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் மண் மற்றும் சவுக்கு மரங்கள் எடுத்து வரப்பட்டு இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மண் மற்றும் சவுக்கு மரங்கள் முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தேவையான மரங்கள் மற்றும் மண் எடுத்து வரப்பட்டு மண் மூட்டைகள் தயார் செய்யும் பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. முன்னெச்சரிக்கையாக பிரதான பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கு அதிகம் ஏற்படும் சூழ்நிலையில் தேவைப்படும் இடங்களில் சவுக்கு மரங்களை பயன்படுத்தி மணல் மூட்டை வைத்து அடைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.