அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ஆலங்குடி அருகே அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-19 23:36 IST

ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி துரை, அறந்தாங்கி துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) நமச்சிவாயம், திருவரங்குளம் வட்டார மருத்துவர் ராமச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவ பெட்டகத்தை பெண் ஒருவருக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், கிராமப்புற மக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் போராட்டம் என்று கூறி வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டு காலமாக இந்த மாவட்டத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. தற்போது முதல்-அமைச்சர் நேரடி கண்காணிப்பில் அறந்தாங்கியில், ரூ.46 கோடியில் உயர் சிகிச்சைக்கான மருத்துவ கட்டிட பணியும், திருமயத்தில் ரூ.10 கோடியில் புதிய மருத்துவ கட்டிட பணியும் நடைபெற்று வருகிறது. ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.8 கோடி புதிய மருத்துவ கட்டிடம் கட்டப்பட உள்ளது. திருநாலூர், அரையப்பட்டி சிலட்டூர், மேற்பனைக்காடு, கொத்தமங்களம், குளமங்களம், ஆலங்குடியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.30 கோடியில் நடந்து வரும் கட்டிட பணிகள் விரைவில் முடிந்து வருகிற ஜனவரியில் திறப்பு விழா காண உள்ளது என்றார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், அரையப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்