இடஒதுக்கீடு அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இடஒதுக்கீடு அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என்று அகில இந்திய சமூக நிதி கூட்டமைப்பு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
டெல்லியில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தலைமையேற்றார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல். இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க தி.மு.க. அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிக மிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு.
தி.மு.க.வை பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாக காரணமே சமூகநீதிதான். சமூகநீதி, சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. 1916-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது சமூகநீதியை உருவாக்கவே தொடங்கப்பட்டது.
பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், மத்திய அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏன், மத்திய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் சமூகநீதி அடிப்படையில் அவர்கள் நிரப்ப வேண்டும். அதனைச் செய்வார்களா? சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினை. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்சினை.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில் அட்டவணை சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓ.பி.சிக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குவதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
* 2015-ல் சேகரிக்கப்பட்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்புத் தரவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
* அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் தரப்படும் இடஒதுக்கீட்டை தனியார் வேலைவாய்ப்பிலும் பின்பற்ற வேண்டும்.
* எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சமூகநீதிக் குழு இருக்க வேண்டும்.
* 50 சதவீதம் என்று உள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ளது போல் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட, அகில இந்திய அளவில் சமூகநீதி கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செயல்படுத்திக்காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக, மிக முக்கியமாக இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு அதிகாரம்
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 சதவீதம் உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாசாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக்கூடாது என்று சொல்வதும் சரியல்ல. "இடஒதுக்கீடு" மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.
இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட சமூகநீதி தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதி பெருவாழ்வு வாழப்பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. எம்.பி.யுமான வில்சன் வரவேற்று பேசினார். ஜார்கண்ட மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, மராட்டிய உணவுத்துறை மந்திரி சாகன் புஷ்பால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பலர் நேரடியாகவும், சிலர் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.