விஷக்காய் தின்ற மின்வாரிய ஊழியர் சாவு
விஷக்காய் தின்ற மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). மின்வாரிய ஊழியர். சம்பவத்தன்று இவர், அங்குள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றில் இருந்த காயை பறித்து தின்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தங்கராஜ் மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தங்கராஜ் சாப்பிட்ட காய், விஷ காயாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர், எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.