அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மயிலாடுதுறையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா இன்று நடைபெறும் என்று மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார்.;
மயிலாடுதுறையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா இன்று நடைபெறும் என்று மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மயிலாடுதுறையில் இன்று அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சென்னை முதன்மை அஞ்சல்துறை தலைவர் .சாருகேசி, திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளனர். அஞ்சல் சமூக வளர்ச்சி விழா அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வழங்கும் அனைத்து அஞ்சல், நிதி சேவைகளையும் ஒரே தளத்தில் பொதுமக்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது.
இந்த விழாவையொட்டி மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஆதார் எடுத்தல் மற்றும் புதுப்பித்தல் என மத்திய, மாநில அரசு சார்ந்த அனைத்து நலத்திட்டங்களும் அவரவர் இல்லம் தேடி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை திட்டம்
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவோருக்கு அஞ்சல் துறை மூலம் பணப்பரிவர்த்தனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் அஞ்சல் துறை மூலம் ஆறுபாதி, சோழம்பேட்டை, புளியந்துறை உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உதவித்தொகை இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் கணக்குகள் மூலம் வழங்கப்படுகிறது. மேற்கூறிய சேவைகளை சிறந்த முறையில் பொது மக்களுக்கு வழங்கிய மயிலாடுதுறை கோட்ட அஞ்சல் ஊழியர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.