சலங்கை எருது,உருமியுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Update: 2023-01-09 17:25 GMT


உடுக்கம்பாளையம் கிராமத்தில் பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சலங்கை எருது, உருமி மேளத்துடன் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உடுக்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் கோவில் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் 2 சலங்கை எருதுகள் (சலங்கை மாடு) மற்றும் உருமி மேளத்துடன் நேற்று காலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எங்கள் ஊரில் கிராம நத்தத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் ஆயிரம் ஆண்டுகளாக ஊர் சார்பாகவும் எங்கள் சமூகம் சார்பாகவும் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா பணிகள் நடந்து வருகிறது.

ஆக்கிரமிப்பு

இங்கு நோன்பு சாட்டுதல், பூவோடு எடுத்தல், சலகெருது மரித்தல், தேவராட்டம் ஆடுதல், கும்மியடித்தல், ஆடிப்பெருக்கு அன்று பொது தூரி அமைத்து விழா கொண்டாடுதல், தைப்பூசத்தில் முருகனுக்கு தேர் வரைந்து மாவிளக்குடன் கும்மி அடித்து வழிபடுதல் என காலம் காலமாக பல்வேறு வழிபாடுகள் நடத்தி வருகிறோம். ஆனால் அந்த இடமானது தற்போது தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பொது விழா நடத்த தடை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது. எனவே இந்த இடத்தை மீட்டெடுத்து எங்களின் குலதெய்வ வழிபாட்டிற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்