இலவச தையல் எந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலவச தையல் எந்திரத்தை பெற விதவை, கணவனால் கைவிடப்பட்ட, ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு வருமானம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமான சான்று ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். சாதி, இருப்பிடச்சான்று மற்றும் பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம்
விண்ணப்பதாரரின் கலர் போட்டோ-2, தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் http://kallakurichi.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி, வ.உ.சி.நகர், 5-வது தெரு, கச்சிராயப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி-606 213 என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாற அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.