ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் விழா

திண்டுக்கல், பழனியில் ஆவணி அவிட்டத்தையொட்டி ஏராளமானோர் பூணூலை மாற்றி அணிந்தனர்.

Update: 2022-08-11 16:53 GMT

பூணூல் அணியும் விழா

திண்டுக்கல் மாவட்ட ஆயிர வைசியர் சங்கம் மற்றும் திண்டுக்கல் மாநகர ஆயிர வைசியர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் விழா திண்டுக்கல் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார்.

மாநகர ஆயிர வைசியர் சங்க தலைவர் முருகதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், சங்க பொருளாளர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விநாயகர் வழிபாடு நடந்தது. அதன் பிறகு பூணூல் அணியும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, புரோகிதர்கள் மந்திரங்கள் கூற அதை உடன் கூறி பூணூல் மாற்றிக் கொண்டனர்.

சிறப்பு அலங்காரம்

இதேபோல் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் பூணூல் அணியும் விழா திண்டுக்கல் தெற்கு ரதவீதி அக்கசாலை விநாயகர் கோவிலில் நடந்தது. இதற்கு கோவில் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி, அக்கசாலை விநாயகர் கோவில் நிர்வாகிகள் மனோகரன், பாண்டிரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

வேதமந்திரங்கள்

திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில் பூணூல் அணியும் விழா நடந்தது. இதற்கு ேகாவில் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி திருமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி புதிதாக பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு விநாயகர் பூஜை, பூணூலில் மஞ்சள் தடவி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேத, மந்திரங்கள் ஓத ஏராளமானோர் பூணூலை மாற்றிக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்