பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா தொடக்கம்
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா தொடக்கம்;
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அந்தமான் போர்ட் பிளேர் மறைமாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பிலிருந்து பூண்டி அன்னையின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சிறு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து வந்தனர். பூண்டி அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடியை பக்தர்கள் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது.
சிறப்பு திருப்பலி
பின்னர் பூண்டி பேராலயத்தின் ஆண்டு திருவிழாவின் கொடியை அந்தமான் போர்ட் பிளேர் மறைமாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் ஏற்றி வைத்தார். அப்போது சிலுவை வடிவிலான பலூன்கள் வானத்தில் பறக்க விடப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு திருப்பலியில் பிஷப் விசுவாசம் செல்வராஜ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இதில் பூண்டி பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
விழாவை முன்னிட்டு பூண்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனி நடக்கிறது. பல்வேறு அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படும். வருகிற 14-ந்தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் அருள் தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதாவின் அலங்கார தேர்பவனியை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.
தேர்பவனி தொடங்கியவுடன் சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும். தேர்பவனி நிறைவடைந்தவுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.