சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் குளங்கள்
கழிவுநீர், குப்பைகளால் நிரம்பி சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் குளங்கள் உள்ளன.;
விண்ணில் இருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு மழை துளியும் உயிர் காக்கும் உன்னதம் கொண்டது. பல துளிகள் தானாக சேர்ந்து வெள்ளமாக உருவெடுத்து ஓடை, ஆறாக பள்ளத்தை நோக்கி பாய்ந்து ஓடுகிறது.
தலைவிரித்தாடிய தண்ணீர் தட்டுப்பாடு
நிலத்துக்கும், அனைத்து உயிருக்கும் ஆதாரமாக விளங்கும் மழைநீரை ஓரிடத்தில் நிலைநிறுத்தி சேமித்து வைக்கிறோம். இதனால் குளம், ஏரி, அணைகள் என நீர்நிலைகள் உருவாகின்றன. இந்த நீர்நிலைகளை, நமது முன்னோர்கள் நிலத்தின் தன்மை, தேவைக்கு ஏற்ப உருவாக்கினர்.
இத்தகைய நீர்நிலைகள் நிறைந்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். வளம் மிகுந்த மலைகள் 3 திசைகளிலும் இருந்தாலும், திண்டுக்கல் மழை குறைந்த பகுதி தான். செக்கிழுக்க மாட்டை கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பெண் கொடுக்காதே என்று கூறும் அளவுக்கு ஒருகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.
இதுபோன்ற தட்டுப்பாடு என்றும் வரக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையோடு முன்னோர்கள் செயல்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு துளி மழைநீரும் வீணாவதை தடுக்க திண்டுக்கல் நகரின் நீர்நிலைகளை உருவாக்கினர். திண்டுக்கல் நகரில் மையப்பகுதியில் மலைக்கோட்டையை சுற்றிலும் ஏராளமான குளங்கள் அமைந்தன.
காணாமல் போன குளங்கள்
அந்த வகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் நகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அய்யன்குளம், கோபாலசமுத்திரம் குளம், அரண்மனைகுளம், லிங்கம்மாள்குளம், ஒய்.எம்.ஆர்.பட்டி குளம் என குளங்கள் நிறைந்த பகுதியாக திண்டுக்கல் இருந்தது.
திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சிறுமலையில் இருந்து குளங்களுக்கு நேரடியாக மழைநீர் வந்துள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன.
ஆனால் வரத்து கால்வாய், குளங்களை முறையாக பராமரிக்க தவறியதால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி கொண்டன. மேலும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய், குளங்கள் குறுகி ஒருகட்டத்தில் அவை காணாமல் போய்விட்டன. அந்த வகையில் 5-க்கும் மேற்பட்ட குளங்கள் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. காணாமல் போன குளங்களை மீட்பது இனிமேல் பெரும் சிரமம். தற்போது இருக்கும் குளங்களின் நிலையை பார்த்தால் அது பெரும் வேதனையாக உள்ளது.
கழிவுநீர், குப்பைகள்
திண்டுக்கல் நகரில் மீதம் இருக்கும் குளங்கள் அனைத்தும் கழிவுநீர் குளங்களாக தான் காட்சி அளிக்கின்றன. நகரின் பல பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அந்தந்த பகுதியில் உள்ள குளங்களில் தான் கலக்கிறது. மேலும் குப்பைகள், கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிப்பு குளமாக மாற்றப்பட்டது. அதில் கோபாலசமுத்திரம் குளத்தில் மட்டும் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தூர்வாரப்பட்ட மற்ற 2 குளங்கள் உள்பட அனைத்து குளங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது.
கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திண்டுக்கல் நகரில் சுமார் 2½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவ்வளவு மக்கள் வாழும் நகருக்குள் கழிவுநீர் குளங்கள் இருப்பது சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. பொதுவாக மழைக்காலத்தில் தான் கொசுத்தொல்லை இருக்கும். ஆனால் திண்டுக்கல்லில் கழிவுநீர் குளங்களால் ஆண்டு முழுவதும் கொசுத்தொல்லையை தடுக்க முடியவில்லை.
இதனால் சாரல் மழை பெய்தால் கூட கொசுக்கள் மூலம் நோய்கள் வேகமாக பரவுகின்றன. இந்த குளங்கள் அனைத்தையும் தூர்வாரி மழைநீரை சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும். அதன்மூலம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத ஊராக திண்டுக்கல் மாறிவிடும். திண்டுக்கல்லுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டால் உருவான பழமொழியை விரட்டிய பெருமை உண்டாகும். அதைவிட மிக முக்கியமாக தொற்றுநோய் பரவல் குறைந்து மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.