திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-04 19:00 GMT

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரால் விழா நடத்தப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள், காலை 8 மணிக்கு கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழி நடைபெறும் திடலில் அக்னி வளர்க்கப்பட்டது. மாலை 5.30 மணியளவில் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன், கிருஷ்ணன், அர்ச்ஜூனன் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. பின்னர் கோவில் பூசாரி மாரிமுத்து முதன்முதலாக பூக்குழி இறங்கினார். இதனை தொடர்ந்து 150 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரிசுந்தர வடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், நிர்வாக அதிகாரி வெங்கடகோபு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை தக்கார் கண்ணதாசன், நிர்வாக அதிகாரி கேசவ ராஜன், கணக்கர் குமார் மற்றும் காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தனுஷ்கோடி, மாரியப்பன், பாண்டியராஜன், காளிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்