திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
சிவகிரி அருகே திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் பழமைவாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினால் விழா நடத்தப்பட்டது. தினமும் மூலவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணர், திரவுபதி, அர்ச்சுணர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
9-ம் திருநாளான நேற்று பூக்குழி திருவிழா சேனைத்தலைவர் சமூகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மூலவர் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில் கிருஷ்ணர், திரவுபதி, அர்ச்சுணர் ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர். பூக்குழி இறங்குவதற்காக 41 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கியவாறு சப்பரத்துக்கு முன்பாக சென்றனர். சப்பரம் பூக்குழி திடலை அடைந்ததும், முதலில் கோவில் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கினார். தொடர்ந்து பக்தர்களும் இறங்கினர்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை புளியங்குடி சரக ஆய்வாளர் சரவணகுமார், செயல் அலுவலர் மற்றும் தக்கார் கேசவராசன், சிவகிரி தாசில்தார் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.