கோவில்களில் சிறப்பு பூஜை

சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-04-14 18:45 GMT

ராமேசுவரம், 

சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்புத்தாண்டு

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் நேற்று சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவிலில் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து கோவிலின் கருவறையில் உள்ள ராமநாதசாமி-பர்வதவர்த்தினிஅம்பாள் விஸ்வநாதர், விசாலாட்சி உள்ளிட்ட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதுபோல் ராமேசுவரம் கோவிலின் உப கோவிலான கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம், லட்சுமணேஸ்வரர், கோதண்டராமர் கோவில், உஜ்ஜயினி, பத்ரகாளியம்மன், நம்புநாயகிஅம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாம்பன் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வீடுகளில் வழிபாடு

ராமநாதபுரம் மல்லம்மாள் காளியம்மன் கோவில், வெட்டுடையாள் காளி அம்மன் கோவில், உதிரகாளி அம்மன் கோவில், வழிவிடுமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது ெதாடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் காட்சி அளித்தனர். அதேபோல் தமிழ் புத்தாண்டு பிறந்ததையொட்டி வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு மாலை மற்றும் பிரசாதம் படைத்து விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர். வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் பலரும் தமிழ்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தில் முக்கியமானது கனிகாணுதல் நிகழ்வாகும். இந்த தினத்தில் பூஜைஅறையில் கண்ணாடியில் கனிகளை வைப்பது சாஸ்திரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கண்ணாடியில் கனிகளை கண்டால் ஆண்டு முழுவதும் இனிப்பாக அமையும் என்பதன் அடிப்படையில் இந்த நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது.

கனிகாணுதல் நிகழ்வு

அதன்படி நேற்று பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜைஅறைகளில் கண்ணாடி வைத்து அதன் முன் மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு ஆகிய பழ வகைகளையும், நவதானியங்கள், அரிசி, துவரம்பருப்பு, வெல்லம், கல் உப்பு போன்றவற்றையும் வைத்து வழிபட்டனர். மேலும், ராமநாதபுரம் காட்டுப்பிள்ைளயார் கோவில் அருகே உள்ள அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் ேகாவில்களில் சித்திரை விஷு பிறப்பையொட்டி சிறப்பு நடைதிறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், கனிகாணுதல் நிகழ்வும் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்