கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு

Update: 2023-08-08 19:30 GMT

சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் கோவிலில் விடிய, விடிய பொங்கல் வைத்தனர். பக்தர்கள் பலர் மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுதவிர பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு சார்பில் கோவிலுக்கு வந்தவர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நடக்கிறது. இன்று (புதன்கிழமை) கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருட்டு, வழிப்பறி உள்பட குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை கண்காணிப்பதற்காக கோவில் முன்பு தனி அறை அமைத்து அங்கிருந்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர்.

இதேபோல் குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், சேலம் சின்ன மாரியம்மன் உள்ளிட்ட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று இரவு ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனால் இரவு அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்