ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன்
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வினியோகித்து வருகின்றனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வினியோகித்து வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்க பணம் வருகிற 9-ந் தேதி முதல் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து சர்க்கரை, பச்சரிசி ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாவட்ட வழங்கல் அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
200 டோக்கன்
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி வாசுகி கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் ஒவ்வொரு கடைகள் மூலம் 100 முதல் 200 கார்டுதாரர்களின் வீடு, வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வழக்கமான ரேஷன் பொருள் வழங்கல் பணிகளோடு தொகுப்புக்கான டோக்கன்களும் வழங்கப்படுகிறது.
டோக்கன் வழங்கும் சமயங்களில் வீடுகளில் இல்லாதவர்களுக்கு மீண்டும் அவர்களது வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு வழங்கும்போது முதியோர், கா்ப்பிணிகளை காத்திருக்க வைக்கக்கூடாது. இணையதள பிரச்சினை ஏற்பட்டால் வேறு வழிமுறைகளை பின்பற்றி, பயனாளிகள் விவரங்களை பதிவு செய்து தொகுப்பு வழங்க வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 1,000-க்கும் மேல் கார்டு உள்ள பகுதிகளில் டோக்கன்களை விரைந்து கொடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.