பொங்கல் பரிசு தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும்.
ஏழை மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து அதை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் காரணமாகும்.
வழக்கமாக, பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டில் பரிசு தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழு கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.