பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடந்தது.;
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது.
கோவில்பட்டி
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கோவில்பட்டி தாலுகாவில் உள்ள 92 ரேஷன் கடைகள் மூலம் 70 ஆயிரத்து 900 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
கோவில்பட்டி காந்தி நகர் ரேஷன் கடையில் நகரசபை தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோன்று கோவில்பட்டி பங்களா தெரு ரேஷன் கடையில் நகரசபை கவுன்சிலர் ஜேஸ்பின் லூர்து மேரியும், இலுப்பையூரணி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனமும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தனர்.
முக்காணி
ஆத்தூரை அடுத்த முக்காணி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க 1-ம் எண் ரேஷன் கடையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமை தாங்கி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
முக்காணி பஞ்சாயத்து தலைவர் தனம் என்ற பேச்சித்தாய், கூட்டுறவு சங்க செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முக்காணி 2-ம் எண் ரேஷன்கடையிலும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.
வீரபாண்டியன்பட்டினம்
திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, 1,860 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துகுமாரசாமி, துணை பதிவாளர்கள் சந்திரா, மாரியப்பன், கண்காணிப்பாளர் ஜோசில்வாஸ்டர், கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடகுமார், குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அமுதம் சிறப்பு அங்காடி ரேஷன் கடையில் நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே.நவநீதபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் லட்சுமிமாநகரம் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் தலைவர் வெங்கடேசன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ஏ.கே.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழுகுமலை
கழுகுமலை முருகன் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட 1,2,3,4, ஆகிய ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பண்டகசாலை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவு சார்பதிவாளர் செல்வக்குமார், கள அலுவலர் அக்னி முத்துராஜ், கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் கன்னிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.