பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?

பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-20 18:45 GMT

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

பொங்கல் பரிசு

அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரைக் கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது.

ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்புடையது அல்ல

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-

பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம். எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.

இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

ஏமாற்றம் அளிக்கிறது

பரமத்திவேலூர் வட்டார கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம்:-

கடந்த காலங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் வெல்லம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் கரும்பு விவசாயத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் அழித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் தமிழக அரசு இதுவரையில் வெல்லத்தை கொள்முதல் செய்வது பற்றிய முக்கிய அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருப்பது கவலைக்குரியதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெல்லத்தை தமிழக அரசு உள்ளூர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதன் மூலம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ள கரும்பு விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு இதுவரை வெல்லத்தை கொள்முதல் செய்யாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. எனவே வருங்காலங்களிலாவது தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வெல்லத்தை வழங்க உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எங்கள் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருவதால், எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும் என நம்புகிறோம்.

விவசாயிகளுக்கு ஊக்கம் தரும்

திருச்செங்கோட்டை சேர்ந்த நரேந்திரன்:-

பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசின் பரிசு தொகுப்பு பொருட்கள் பயன் உள்ளதாக இருக்கின்றன. அதனுடன் சேர்த்து ரொக்கப் பணமும் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு ரொக்கப்பணமா? பரிசு தொகுப்பா? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

ஒருவேளை ரொக்கப் பணம் கொடுக்கும் முடிவை அரசாங்கம் எடுத்தால் குடும்ப தலைவிகள் கையில் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஆண்கள் கைக்கு சென்றால் அந்த பணம் 'டாஸ்மாக்' கடைகளின் கஜானாவுக்கு சென்றுவிடும் என்கிற பொதுவான கருத்தையும் கவனிக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் ரொக்கப்பணம் தருவதற்கு பதிலாக பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தால், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ள விவசாயிகளுக்கு சற்று ஊக்கம் தருவதாக இருக்கும்.

ரொக்கமாக வழங்க வேண்டும்

எருமப்பட்டியை சேர்ந்த மல்லிகா:-

பொங்கல் பண்டிகை வந்தாலே பணமுடிப்பு கிடைக்கும் என்கிற எண்ணத்தை கடந்த ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டனர். ஆனால் கடந்த ஆண்டு பணம் வழங்கப்படவில்லை. 21 பொருட்களுடன் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் சில பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது.

குறிப்பாக வெல்லம் உருகி போய் இருந்ததால் பொங்கல் வைக்க சிரமம் அடைந்தோம். எனவே இந்த ஆண்டு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்கப்பணமாக வழங்கினால் மக்களே தரமான பொருட்களை வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். மீதமுள்ள பணத்தை மற்ற செலவுக்கு பயன்படுத்திக்கொள்ள வசதியாகவும் இருக்கும்.

விமர்சனம் வராது

மோகனூர் அருகே உள்ள ராமுடையானூரை சேர்ந்த கலைவாணி:-

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டாலே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய பேச்சு தான் பெண்களிடம் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்களுடன் மளிகை பொருட்கள் வழங்கியது போன்று இந்த ஆண்டும் வழங்கினால் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த ஆண்டு ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று பேச்சு அடிப்படுகிறது. பணம் கிடைத்தால் பண்டிகையை கூடுதல் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும். இரண்டையும் சேர்த்து வழங்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். அதேசமயம் பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் கடந்த ஆண்டை போன்று தரம் பற்றிய விமர்சனம் வராது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்கப்பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்