பொங்கல் பண்டிகை பொருட்கள் தரமானதாக இருக்கும் - அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-03 09:23 GMT

சென்னை,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 100 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.

கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 19,269 நபர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்களுக்கும்

வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதியும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்