ஒரே நேரத்தில் 914 பேர் பொங்கல் வைத்து வழிபாடு
நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் ஓரே நேரத்தில் 914 பேர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.;
சிவகங்கை,
நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் ஓரே நேரத்தில் 914 பேர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
செவ்வாய் பொங்கல்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நகரத்தார்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து விடுவார்கள். கோவிலுக்கு முன்பாக உள்ள பொட்டலில் குடும்பத்திற்கு ஒரு புள்ளி என்ற கணக்கில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கு திருமணம் முடிந்தவுடன் அவர்கள் "ஒரு புள்ளியென" கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
இதில் பொங்கல் வைப்பவர்களின் பெயர்களை ஒரு பானையில் போட்டு குலுக்கி எடுப்பார்கள். அதில் வரும் நபர் முதன்முதலில் பொங்கல் வைப்பார். அதன்பின்னர் தான் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள்.
914 பேர் பொங்கலிட்டனர்
இந்த ஆண்டு நகரத்தார் சார்பில் 914 பேர் பொங்கலிட்டனர்.இதே போல் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்துடன் வந்து பார்த்தார்.