நேர்த்திக்கடன் செலுத்திய கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கு ஏலம்

சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கும், எலுமிச்சை ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் ஏராளமான பெண்கள் வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.;

Update:2023-01-18 00:15 IST

சிவகங்கை,

சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கும், எலுமிச்சை ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் ஏராளமான பெண்கள் வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.

நேர்த்திக்கடன்

சிவகங்கை அருகே சலுகைபுரத்தில் மாட்டுப்பொங்கல் விழாவை பாரம்பரிய கிராம பழக்க வழக்கப்படி கொண்டாடினர். மாட்டு பொங்கலையொட்டி அப்பகுதி பெண்கள் அணிகலன்கள் அணியாமல் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர்.

விழா முடிந்ததும் மாலையில் கிழக்குத்தெருவில் பச்சைநாச்சியம்மனுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவற்றை கீழத்தெரு அம்மன் கோவில் முன்பு ஏலம் விட்டனர்.

கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கு ஏலம்

இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

இதில் முதல் கரும்பை சந்திரன் என்பவர் ரூ.22,001-க்கும், கடைசி கரும்பை அப்பாஸ் என்பவர் ரூ.11,001-க்கும் ஏலம் எடுத்தனர். அதேபோல் எலுமிச்சைகனியை மலையாண்டி என்பவர் ரூ.9,001-க்கு ஏலம் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்