ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் குறைகிறது

கொரோனா தொற்று இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.;

Update: 2023-01-25 20:41 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் தேர்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டன. மேலும், மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கொரோனா பாதிப்பு பரவலாக இருந்ததால், கொரோனா நோயாளிகளுக்காக ஒரு மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கப்பட்டு மாலை 6 மணி வரை நடந்தது. அதன்பிறகு கொரோனா நோயாளிகள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து வந்து வாக்களிக்கும் வகையில் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நீட்டிக்கப்பட்டது.

ஒரு மணிநேரம்

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் இல்லாததால் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து இடைத்தேர்தலில் ஒரு மணிநேரத்தை குறைக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்