பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.;

Update: 2023-02-13 23:49 GMT

சென்னை,

பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை உள்ளிட்ட இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி, நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தது. அதேபோல, போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையும், படிக்கும் கல்லூரியையும் வெளியிட்டார். இதன்மூலம், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வரக்கூடாது என்று மறைமுகமாக மிரட்டியுள்ளார். இதனால், இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது பெயர்களும் வெளியில் தெரிந்து விடும் என்ற அச்சத்தில் புகார் கொடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

புகார்

எனவே, அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டதற்கு காரணமான முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராகவும், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தேன்.

இந்த புகாரை தமிழ்நாடு டி.ஜி.பி., கோவை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு முதல்-அமைச்சர் முகவரித்துறை செயலாளர் அனுப்பி வைத்துள்ளார். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

கெட்ட நோக்கம்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், 7 போலீஸ் சூப்பிண்டு மீது ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?, இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளையும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது தெரியுமா?' என்று மனுதாரர் தரப்புக்கு சரமாரியாக கேள்வி கேட்டனர்.

பின்னர், 'இந்த பொதுநல வழக்கு கெட்ட நோக்கத்துக்காக தொடரப்பட்டு உள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்