இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை

நெல்லையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-10-09 20:35 GMT

நெல்லை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நெல்லை டவுனில் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் திருப்பணிகரிசல்குளம் வீட்டுக்கு ரஞ்சன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'தென் மாவட்டங்களில் நிகழும் சாதி பிரச்சினைகள், அதனால் ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்படுவது குறித்து முதல்-அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். சாதிய பார்வையில் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

பாளையங்கோட்டை மகாராஜநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது 2 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் த.ம.மு.க. மகளிர் அணி செயலாளர் வசந்தி, சர்மிளா, புல்லட்ராஜா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல்ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை வேப்பங்குளம் அலுவலகத்தில் இமானுவேல்சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாரியப்ப பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தச்சநல்லூர், ஊருடையார்புரம் ஊர் இளைஞர்கள் சார்பில் பாளையங்கோட்டை பிஷப் ஜார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

இதுதவிர மகாராஜாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சி.சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாங்குநேரி ஒன்றியம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் முதியோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி ஒன்றிய தலைவர் என்.எம்.கே.தேவேந்திர சுதாகர் உணவு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்