போலீஸ்காரரின் வழக்கு நுகர்வோர் கோர்ட்டில் தள்ளுபடி

நடுவழியில் அரசு பஸ் விட்டுச்சென்றதற்காக இழப்பீடு கேட்ட போலீஸ்காரரின் வழக்கு நுகர்வோர் கோர்ட்டில் தள்ளுபடி செய்தது.;

Update: 2022-12-08 20:14 GMT

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 16.10.2020 அன்று திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் முடித்து, அரசு பஸ்சில் மதுரை புறப்பட்டு வந்தேன். மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச்சாலையில் இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். அதற்குள் பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது.

பின்னர் மற்றொரு அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து மதுரை வந்தேன். ஏற்கனவே வந்த பஸ்சில் எனது உடைமைகள் இருந்தன. அதை செக்கானூரணி பணிமனைக்கு சென்று பெற்றேன். அரசு பஸ் டிரைவர், கண்டக்டரின் கவனக்குறைபாடு, சேவை குறைபாட்டினால் வீண் அலைச்சலும், மனஉளைச்சலும் ஏற்படுத்தியதற்காக ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கண்டக்டரைத்தான் எதிர்தரப்பாக சேர்த்திருக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனரை சேர்த்தது பொருந்தாது என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்