எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"ஒடிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதல்-அமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில கவர்னராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம். ராஜேந்திரனின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனால் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.எம். ராஜேந்திரனின் சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.