அடைமொழி வைத்து அழைப்பதை போலீசார் நிறுத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
அடைமொழிகளை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை பறிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
சென்னை,
கடந்த 2022-ல், சூளைமேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்கியதாக சரவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை 'குரங்கு' சரவணன் என போலீசார் குறிப்பிட்டதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
ஒருவரது பெயரை மாற்றுவது அவர்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் மரியாதை குறைவான பெயர்களை வைக்கக் கூடாது, என்றும் கூறி வழக்கு ஆவணங்களில் இருந்த 'குரங்கு' என்ற வார்த்தையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற அடைமொழிகளை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை பறிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்கான உரிய அறிவுறித்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளதாகக் கூறி, சரவணனை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.