வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
ஆத்தூர் அருகே கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார்.
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார்.
பழ வியாபாரி
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 34). இவர் பட்டைகோவில் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரியும் சின்னதிருப்பதியை சேர்ந்த ராம்மோகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலீஸ் ஏட்டு ராம்மோகனுக்கு தரவேண்டிய பணத்தை பழ வியாபாரி அன்பரசன் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவரிடம் பேசுவதை அன்பரசன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் ஏட்டு ராம்மோகன் சேலத்தில் இருந்து 5 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி, பழ வியாபாரி அன்பரசனை காரில் கடந்த 21-ந் தேதி கடத்தி உள்ளனர்.
பணி இடைநீக்கம்
ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில், அந்த கும்பலிடம் இருந்து பணம் தயார் செய்து வருவதாக கூறிய அன்பரசன், அங்கிருந்து தப்பி ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படையை சேர்ந்த சேலம் மல்லிகை நகர் ஆனந்த் (26), அயோத்தியாப்பட்டணம் தாதனூர் காலனியை சேர்ந்த தீனதயாளன் (31), பள்ளப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (23), பிரசாந்த் (27), வீராணத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26) மற்றும் போலீஸ் ஏட்டு ராம்மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், கூலிப்படையை ஏவி, வியாபாரியை கடத்திய போலீஸ் ஏட்டு ராம்மோகனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.