பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு நடத்தினர்.;

Update: 2022-06-23 15:40 GMT

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு நடத்தினர்.

6-ந் தேதி கும்பாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் திருப்பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், அறநிலையத்துறை என்ஜினீயர் ராஜ் குமார், கோவில் மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகா ராஜன், தலைவர் பெனிரா ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

அவர்கள் கோவிலில் பக்தர்கள் வருகை தரும் இடம், அன்னதானம் வழங்கும் இடம், கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தும் இடம் ஆகியவற்றை வரைப்படத்துடன் நேரில் பார்வையிட்டனர். அப்போது, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், அதிகாரிகளிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி வசதியான இடத்தில் கார்பார்க்கிங் செய்து கோவிலுக்கு வந்து செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என கூறினார்.

நிகழ்ச்சியில் திருவட்டார் சிறப்பு தாசில்தார் இசபெல்லா, கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, குலசேகரம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்