செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஊர்வலம்-போலீசார் தடுத்து நிறுத்தினர்
செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஊர்வலம் சென்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் வாகனங்களில் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.
செய்யாறு
செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஊர்வலம் சென்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் வாகனங்களில் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.
ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரித்து செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பல அண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக புற்பட்டனர்.
ஊர்வலம் பெரியார் சிலை அருகே வரும்போது பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என கூறி அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்த பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிளகளில் காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தனர்.
அங்கு அவர்கள், ''வேண்டும் வேண்டும், செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும்'' என கோஷங்கள் எழுப்பினர். இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் அனாமிகாவிடம் வழங்கினர்.
உதவி கலெக்டரிடம் மனு
செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:-1959-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் செய்யாறு கோட்டம் தவிர மற்ற அனைத்து வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டு விட்டன.அதன் அடிப்படையில் 64 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தினை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்.
செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்காகளில் உள்ள கிராமங்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமை இடமான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால விரயமும் பண விரயமும் ஆகிறது. செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பெற்றால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும்.
வாக்குறுதி
எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2016-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த வாக்குறுதியினை நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.