கைதானவர்களை விடுவிக்க கோரி ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு
கைதானவர்களை விடுவிக்க கோரி ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் முருகன் (வயது 48). இவர் இதேஊரில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஓட்டலுக்கு சாப்பிட வந்த நெய்வேலி அடுத்த குப்பநத்தத்தை சேர்ந்த விஜயகுமார், ராம்குமார் ஆகியோர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் எச்சிலை துப்பியதாக தெரிகிறது. இதைபார்த்த முருகன் அவர்களிடம் ஏன் ஓட்டலுக்குள் எச்சில் துப்புகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் சேர்ந்து ஓட்டலை சேதப்படுத்தியதோடு முருகன், கடையில் இருந்த அவருடைய மனைவி புஷ்பா, உறவினர் சுந்தரமூர்த்தி ஆகியோரையும் சரமாரியாக தாக்கிச் சென்றார்.
2 பேர் கைது
இதில் காயமடைந்த முருகன் உள்ளிட்ட 3 பேரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதோடு, இதுபற்றி, ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜயகுமார், ராம்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிந்து வரதராஜன்(43), பாக்கியராஜ்(35) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
முற்றுகை-சாலை மறியல்
இந்த சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த கைதானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கைதான வரதராஜன், பாக்கியராஜை விடுவிக்க கோரி திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, அப்பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைபார்த்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் ஊ.மங்கலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.