சூளகிரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

Update: 2023-04-08 19:00 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த மாதம் எருதுவிடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் லட்சுமணன் விழாக்குழுவினர் அமைத்த மைக்கை உடைத்ததாக கூறப்படுகிறது.இதனால் உடைந்த மைக்கிற்கு பதிலாக புதிய மைக் வாங்க, ஊர் பொதுமக்கள் லட்சுமணனிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஊர் கட்டுப்பாடு என கூறி தனக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததாக ஊர் பொதுமக்கள் மீது லட்சுமணன் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் பிரச்சினையை முன்னிறுத்தி லட்சுமணன் மற்றும் அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் ஊர் பொதுமக்களையும், ஊரில் உள்ள பெண்களையும் அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சூளகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்