கன்னியாகுமரியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கன்னியாகுமரியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி செல்வம். இவர் மீது 6 கொலை வழக்கு உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீசார் இவரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் சுசீந்திரம் பைபாஸ் அருகே ரவுடி செல்வம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், ரவுடி செல்வத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது ரவுடி செல்வம் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பமுயன்றார்.
இதையடுத்து தற்காப்பு நடவடிக்கைக்காக போலீசார் ரவுடி செல்வத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ரவுடி செல்வம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.