மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளியில் போலீசார் சோதனை

விடுதியில் மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வன்முறை வெடித்தது மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளியில் போலீசார் சோதனை

Update: 2022-07-23 17:37 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17-ந்தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.

மேலும் பள்ளி வகுப்பறை மற்றும் அலுவலகத்துக்குள் புகுந்து தீ வைத்தனர். இதில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. மாணவி மர்ம சாவு மற்றும் கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது வெடிபொருட்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அறிய வெடிகுண்டு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 10 பேரை கொண்ட வெடிகுண்டு பிரிவு குழுவினர் நேற்று காலை சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் கலவரக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள் உருக்குலைந்து நின்ற பகுதிக்கு சென்றனர். அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து வகுப்பறை, அலுவலக அறை போன்ற தீ வைக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு தீயில் கருகி கிடந்த பொருட்களை எடுத்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பள்ளி வளாகத்துக்குள் யாரையும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மதியம் 2½ மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணிவரை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்