யூடியூபர் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!

யூடியூபர் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-14 12:34 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎப் வாசன் வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் ஏராளமான அவரது ரசிகர்கள் குவிந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள், கார்களில் அதிகப்படியான ஒலி எழுப்பி, தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நேரிசல் அப்பகுதியில் ஏற்பட்டது. அப்போது வாகனங்களை அப்புறப்படுத்த கோரி ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை அவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் போக்குவரத்திற்கு இடையூராக செயல்பட்டுள்ளனர். இதனால் அவர்களை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். ஆனால் டிடிஎப் வாசன் புறப்படும் போதும் இதேபோன்று ரசிகர்கள் போக்குவரத்து நேரிசல் ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், வாகனங்களில் ஒலி எழுப்பியவாரு சென்றவர்களால் விபத்தும் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை கைப்பற்றி, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோன்று, டிடிஎப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போன்றோர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்