குள்ளஞ்சாவடியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

குள்ளஞ்சாவடியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-07-10 18:45 GMT

குள்ளஞ்சாவடி, 

குள்ளஞ்சாவடி அருகே காவலர் குடியிருப்பு பின்புறம் பகுதியில் உள்ள முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஆறுமுகம் (வயது 45), விவசாயி. இவர் கடந்த 6-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன், கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில், அவருடைய வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ஆறுமுகத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு பதறிய அவர், உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து பாா்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ¾ பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் 2 வீடுகள்

மேலும் இதேபோல் அவருக்கு வீட்டுக்கு அருகில் வசிக்கும் பத்திர எழுத்தர் கோபாலகிருஷ்ணன்(53) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதற்கு அடுத்த வீடான சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பரணிதரன் என்பவருடைய வீட்டில் பட்டுப்புடவைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்த 3 வீடுகளையும் பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் பீதி

இதில் கடந்த மாதம் ஏற்கனவே பரணிதரன் வீட்டில் மர்மநபர்கள் 2 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம், பட்டுப்புடவைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்