போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நகை வியாபாரிகளிடம் கொள்ளை
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுபரா (வயது 56) மற்றும் ரகுமான் (48). நகை வியாபாரிகளான இவர்கள், சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1 கோடியே 40 லட்சத்துடன் கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் இறங்கிய 2 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் சவுகார்பேட்டைக்கு சென்றனர். யானைக்கவுனி வீரப்பன் தெரு சந்திப்பில் சென்றபோது, அங்கு போலீஸ் போல் நடித்து வாகன சோதனையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரிகள் கொண்டு வந்த ரூ.1 கோடியே 40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி உத்தரவின் பேரில் பூக்கடை துணை கமிஷனர் ஆல்பர்ட்ஜான் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இந்தநிலையில் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்ரான் (39) தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் நீலகிரி மற்றும் சேலம் பகுதிகளில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.60 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.